தர்மசாலா: இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற நுழைவாயிலில் 'காலிஸ்தான்' பிரிவினைவாத அமைப்பின் கொடி கட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1980களில் தொடங்கப்பட்டதே இந்த 'காலிஸ்தான்' அமைப்பு. 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் போராளிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இப்போது அது பயங்கரவாத அமைப்பாக அறியப்படுகிறது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத சிலர் தர்மசாலாவில் உள்ள இமாச்சல சட்டமன்ற நுழைவாயிலில் 'காலிஸ்தான்' கொடிகளைக் கட்டி வைத்தும் சுற்றுச்சுவரில் 'காலிஸ்தான்' என்று பஞ்சாபி மொழியில் எழுதிவிட்டும் சென்றனர்.
இதனைக் கோழைத்தனமான செயல் எனக் குறிப்பிட்டு, கண்டனம் தெரிவித்தார் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர்.
குளிர்காலக் கூட்டத்தொடர் மட்டுமே அந்தச் சட்டமன்றத்தில் நடைபெறுவது வழக்கம். ஆகையால், பெரும்பாலும் அச்சமயத்தில் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தாக்குர் கூறி இருக்கிறார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையில் புகார் பதிவுசெய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி ஆராயப்பட்டு வருகிறது. தவறிழைத்தோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்படும்," என்றும் திரு தாக்குர் சொன்னார்.
இந்நிலையில், பின்னிரவில் அல்லது அதிகாலையில் காலிஸ்தான் கொடியைக் கட்டிவிட்டுச் சென்று இருக்கலாம் என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் குஷல் சர்மா தெரிவித்தார்.
"நுழைவாயிலில் கட்டப்பட்ட காலிஸ்தான் கொடிகளை அகற்றிவிட்டோம். இது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுப்பயணிகள் சிலரது வேலையாகவும் இருக்கலாம்," என்று அவர் கூறினார்.
இதனிடையே, இச்சம்பவத்திற்காக ஆம் ஆத்மி கட்சி, பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளது.
"ஒட்டுமொத்த பாஜகவும் தஜிந்தர் சிங் பக்கா எனும் ஒரு குண்டரைக் காப்பாற்ற முயல்கிறது. சட்டமன்றத்தைக்கூட பாதுகாக்க முடியாத அரசால் எவ்வாறு மக்களைக் காக்க இயலும்? இது இமாச்சலப் பிரதேசத்தின் மாண்பு தொடர்பான விஷயம்; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். பாஜக அரசாங்கம் முற்றிலும் தோற்றுவிட்டது," என்று ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் மணீஷ் சிசோடியா சாடியுள்ளார்.