ஆந்திராவில் ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

ஆந்திராவில் ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

1 mins read
e1740cca-dac3-409c-ae9e-cd6e4876ab5e
காக்கிநாடா பகுதியில் கனத்த மழையால் சேதம் அடைந்த சாலை. படம்: இந்திய ஊடகம் -

திருப்பதி: 'அசானி' புயல் கரையைக் கடந்தாலும் ஆந்திரக் கடலோரப் பகுதியில் அது தொடர்ந்து மையம் கொண்டுள்ளதால் அந்தப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது.

'அசானி' எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம், ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திரக் கடல் பகுதியில் நிலைகொண்டது.

இதனால் ஆந்திர மாநிலத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் புயல் காற்றுடன் கனத்த மழை பெய்தது.

ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் கனத்த மழை பெய்த வேளயில், திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், 'அசானி' புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசூலிப்பட்டினத்திற்கும் நா்சாபுரத்துக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்ததாக ஆந்திரப் பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

'அசானி' கரையைக் கடந்தாலும் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மிதமானது முதல் பலத்த மழை பெய்யும்; எனவே மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது எச்சரித்தது.

இந்நிலையில் 'அசானி' புயலால் ஆந்திர மாநிலம் முழுவதும் பெய்த பலத்த மழையால் ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டது.