அரசு மருத்துவமனைகளில்
ஐந்து ரூபாய்க்கு உணவுத் திட்டம்
ஹைதராபாத்: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலுங்கானா அரசு தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக, ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஹரீஷ் ராவ் தொடங்கி வைத்தார். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தெலுங்கானா அரசு இந்த உயரிய நலத்திட்டத்தை தொடங்கி உள்ளதாக அவர் சொன்னார்.
பால் பண்ணையில் தீ விபத்து;
20 பசுக்கள் உயிரிழந்தன
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரோகிணி சவ்தா கிராமத்தில் உள்ள பால் பண்ணையில் நேற்று மதிய வேளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் கிட்டத்தட்ட 7 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியதில், பண்ணையில் இருந்த 20 பசு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியான்வாபி பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு தொடங்கியது
புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதா என்பதற்கான தொல்லியல் ஆய்வு நேற்று தொடங்கியது. பள்ளிவாசலுக்குள் ஆய்வு செய்வதைத் தடுப்போரைக் கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆய்வு தொடங்கப்பட்டதை அடுத்து வாரணாசி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
1669ஆம் ஆண்டில் ஔரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் கியான்வாபி பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படும் நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மான்கள் வேட்டையைத் தடுக்க சென்ற காவல்துறையினர் மரணம்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அரியவகை மான்களை வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்கள் முகாமிட்டு உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினருக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 3 காவல்துறையினர் மாண்டுவிட்டனர். வேட்டைக்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பல மான்களின் உடல்கள், மயில் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
புதிய முதல்வராக மாணிக் சாகா
அகர்தலா: திரிபுரா மாநில முதல்வராக இருந்து வந்த பாஜகவின் பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைப் பேச்சு போன்றது தொடர்பாக பிப்லப் குமார் தேப்மீது பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் பதவி விலகியுள்ளார்.

