ஹனோய்:: வியட்னாமில் நடைபெற்று வரும் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சிங்கப்பூர் வீரர்கள் அடுத்தடுத்து தங்கப் பதக்க அறுவடை செய்தனர்.
நேற்று மாலை வரை வாள்வீச்சுப் போட்டியிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் நீச்சல் போட்டிகளிலும் சிங்கப்பூருக்குத் தங்கம் கிடைத்தது.
வாள்வீச்சு ஆண்கள் தனிப்பிரிவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தவர் சிங்கப்பூர் தேசிய வாள்வீச்சு வீரர் ஜோனதன் ஆவ் இயோங் (படம்).
ஹனோய் நகரின் மை டின் உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிலிப்பீன்ஸின் நேதனியல் பெரேஸை 15-8 என்ற புள்ளிக் கணக்கில் ஜோனதன் தோற்கடித்தார்.
முன்னதாக, இந்த 21 வயது சிங்கப்பூரர் அரை இறுதியில் ஹான்ஸ் யூங் என்னும் மலேசிய வீரரை 15-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். 2019ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஹான்ஸ் யூங்.
வாள்வீச்சில் சிங்கப்பூர் இப்போதுதான் முதல் தங்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிப் பதக்கம் வரை சிங்கப்பூர் வீரர்கள் வென்றுள்ளனர்.
"இந்த வெற்றி ஒரு கற்பனையோ என்று எண்ணி வியக்கிறேன். அதிக எதிர்பார்ப்புகள் இன்றி போட்டியில் பங்கேற்று என்னால் இயன்றவரை சிறப்பாக ஆடினேன். ஆட்டத்தின் முடிவை எண்ணி மகிழ்கிறேன்," என்றார் ஆவ் இயோங்.
முதன்முறையாக தென்கிழக்காசியப் போட்டியில் பங்கேற்றது முற்றிலும் ஒரு புதிய அனுபவம் என்று கூறிய இவர், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இதற்கு முன்னர் பெரிய போட்டிகளில் பங்கேற்றதில்லை என்றார்.
இந்தப் போட்டியில் பங்கேற்றதும் வெற்றிபெற்றதும் தமது நினையில் நீண்டகாலத்துக்குப் நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார் ஆவ் இயோங்.
முன்னதாக, நேற்றுக் காலை நடைபெற்ற பெண்கள் பிரிவில் சிங்கப்பூரின் ஜெசிகா ஓங் வெள்ளிப் பதக்கம் வென்றார். வியட்னாமின் புயி தி து ஹா என்பவரிடம் 11-15 என்ற புள்ளிக்கணக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.

