லண்டன்: எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்டம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற லீக் கிண்ண இறுதி ஆட்டத்தை நினைவு படுத்தியது. காரணம், லிவர்பூல், செல்சி குழுக்கள் மோதிய இரு ஆட்டத்தின் முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன.
சனிக்கிழமை இரவு லண்டனின் வெம்ப்லி திடலில் நடைபெற்ற ஆட்டத்தில், இறுதி வரை இரு அணிகளும் கோல் போடவில்லை. ஒன்றுகொன்று சளைத்தது அல்ல என்பதை அவை நிரூபித்தன.
இருப்பினும் கூடுதல் நேரத்தில் வழங்கப்பட்ட பெனால்டியில் 5-6 என்ற கணக்கில் செல்சியை வீழ்த்தி லிவர்பூல் வாகை சூடியது. காயம் காரணமாக மத்திய திடல் ஆட்டக்காரரான ஃபெபினோ ஆட்டத்தில் இடம்பெறாத நிலையிலும் லிவர்பூல் குழுவினர் வெற்றியை தங்கள் வசமாக்கினர்.
இருப்பினும், ஆட்டத் தின் இறுதிவரை தமது அணியினர் கோல் எதுவும் போடாதது வருத்த
மளித்தது என்று லிவர்பூல் கோல் காவலர் அலிசன் பெக்கர் கூறினார்.
இருப்பினும் பெனால்டியில் தமது குழுவினர், வியப்புறும் வகையில் கோல்களைக் குவித்து வெற்றிக்கு இட்டுச் சென்றதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்த வெற்றி இனி வரவிருக்கும் பிரிமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் துணிச்சலுடன் களமிறங்க ஊக்கம் தந்துள்ளது. இது ஓர் அற்புதமான தருணம். நாங்கள் இதனை அனுபவித்து மகிழ்வோம்," என்றார் அலிசன்.
பிப்ரவரியில் நடைபெற்ற லீக் கிண்ண ஆட்டத்திலும் பெனால்டியில் செல்சியை லிவர்பூல் வீழ்த்தியது.
இரண்டு பிரிமியர் லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் மான்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் லிவர்பூல் மூன்று புள்ளிகள் பின்தங்கி உள்ளது. இம்மாதத்தின் பிற்பாதியில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ரியால் மாட்ரிட்டைச் சந்திக்க உள்ளது லிவர்பூல்.

