இலங்கைக்கு நான்கு டன் டீசலை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: பொருளாதார நெருக்கடியின் காரணமாக சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது.
முதல்கட்டமாக 7,748 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, தானியம் போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் 3,874 கோடி ரூபாய்க்கு எரிபொருளும் அனுப்பிவைக்க முன் வந்தது. பல தவணைகளாக இவற்றை அனுப்பி வருகிறது.
வியாழக்கிழமை 65,000 டன் யூரியா உரத்தை அனுப்பிய இந்தியா, தற்போது 12வது கப்பலில் டீசலை அனுப்பியுள்ளது. இதுவரை 4 லட்சம் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியா, மேலும் 23,245 கோடி ரூபாய் கடனுதவி வழங்கவும் சம்மதித்துள்ளது.
ஐந்து கேரள மாவட்டங்களுக்கு
சிவப்பு எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மழையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.ரஞ்சன் உத்தரவிட்டுள்ளாா்.
'அதானி குடும்பத்தினருக்கு அரசியல் ஆசை இல்லை'
அமராவதி: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்துக்கான ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானிக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அதானி குழுமம், "அதானி குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் அரசியலில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ ஆர்வமில்லை," என கூறியுள்ளது.
மராத்தி நடிகைக்கு சிறைக் காவல்
தானே: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை விமர்சித்ததை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ள மராத்தி மொழி நடிகை கேதகி சிதலேவை, வரும் 18ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேதகி சிதலே, 29, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "சரத் பவாருக்கு நரகம் காத்திருக்கிறது," எனக் கூறியிருந்தார். இதுதொடர்பான புகாரை அடுத்து, தானே காவல்துறையினர் கேதகியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
300 கிலோ காய்கறி, பழங்களை அறுவடை செய்த கைதிகள்
புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை அைமந்துள்ளது. இங்கு 220க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் இயற்கை விவசாயிகளாக மாறி, விளைவித்த 300 கிலோ பூக்கள், காய்கறிகள், பழங்கள் அறுவடை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு இருக்கும் கைதிகளின் மன அழுத்தம் போக்கவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறை நிர்வாகம் இயற்கை விவசாயத்தில் அவர்களை ஈடுபடுத்தி உள்ளது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தா மல், மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களைப் போட்டு கத்தரி, எலுமிச்சை, கீரைகள், முள்ளங்கி, சாமந்தி, மஞ்சள், பப்பாளி, வாழை, மா, பலா உள்ளிட்ட 69 வகை யிலான பயிர்களைச் சாகுபடி செய்தனர். படம்: ஊடகம்

