புதுடெல்லி: 5ஜி தொழில்நுட்பம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளியலுக்கு 450 பில்லியன் டாலர் (சுமார் 34 லட்சம் கோடி ரூபாய்) பங்களிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அடுத்த பத்தாண்டுகளில் 5ஜியைக் கடந்து 6ஜி தொழில்நுட்பத்தைத் தொடங்கும் இலக்கை இந்தியா வகுத்துள்ளது என்றும் அதற்கான பணிகளில் தொழில்நுட்பக் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக இந்தியாவின் எட்டு ஐஐடி கல்வி நிறுவனங்கள் உருவாக்கிய '5ஜி டெஸ்ட் பெட்' என்னும் 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், "நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவில் ஒரு முக்கியமான படியாகும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வர்த்தகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
"இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளது," என்றார் மோடி.