கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலரைக் காணவில்லை என மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இம்மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அசாம் மாநிலத்தில் 545.66 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக அசாமின் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனால் 500,000 பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெளியேறி வேறு இடங் களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 12,145 ஹெக்டர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அங்குள்ள கோப்ளி ஆறு ஏற்கெனவே வெள்ள அபாய அளவுக்கு மேல் சென்ற நிலையில் தற்போது பிரம்மபுத்ரா நதியும் அபாய அளவை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 100,000 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவத்துடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்ததால் திமா ஹசாவோ மாவட்டம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகள், ரயில் தடங்கள் முற்றாக சேதமடைந்து போக்கு
வரத்துக்கு வழியின்றி முடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ரயில் சேவை முடங்கியுள்ள நிலையில், நடுவழியில் சிக்கிய 1,600 ரயில் பயணிகள் ராணுவத்தினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் பயணக் கட்டணம் திருப்பித் தரப்பட்டுள்ளது. இதுவரை ரூ.8 லட்சம் பயணக் கட்டணம் பயணிகளிடம் வழங் கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அசாமில் ஆண்டுதோறும் மழை, வெள்ள பாதிப்பு மாபெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது. இந்தாண்டும் மே மாதமே அசாம் முதல் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் வரும் என்பதால் இது போன்ற பாதிப்புகள் தொடருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அசாமைப் போலவே அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் கன மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு; பலர் மரணம்; பயிர்கள் நாசம்

