அகமதாபாத்: சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி
வரும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஹர்திக் படேல் (படம்) நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இந்தச் சமூகத்தின் வாக்குகளைப் பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.
இந்த சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டு
களுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஹர்திக் படேலை 2019ல் கட்சியில் இணைத்தனர். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓரளவு அதிகரித்து வந்தது.
இருப்பினும் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக பூசல் நிலவி வந்தது. கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்துவந்த ஹர்திக் படேல் சில தினங்களுக்கு முன், 'செயல் தலைவர்' என்னும் சொற்களைத் தமது டுவிட்டர் பதிவிலிருந்து நீக்கினார். அப்போதே இவர் விலகிவிடுவார் என்று ஊகத்தகவல்கள் பரவத் தொடங்கின.
கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் எல்லாப் பதவிகளில் இருந்தும் விலகிவிட்டேன். வருங்காலத்தில் மக்கள் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஹர்திக் படேல் விலகியது பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்
படுத்தி உள்ளது. கூடிய விரையில் இவர் பாஜகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

