மும்பை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 'ஏர்பஸ் ஏ-320 நியோ' என்ற விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.
ஆனால் பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில் அந்த விமானத்தின் இயந்திரம் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது.
அப்போது நிலைமையை சாமர்த்தியமாகச் சமாளித்த விமானி, விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.
இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வேறு ஒரு 'ஏர் இந்தியா' விமானத்தில் ஏற்றி பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியா, நாங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குகிறோம் என்று கூறியது.
"எங்களுடைய விமானிகள், ஊழியர்கள் இது போன்ற பிரச்சினைகளை சிறப்பாக கையாள நன்கு பயின்றவர்கள். எங்கள் நிறுவனம் இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகிறது," என்று மேலும் அது தெரிவித்தது.

