செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ac71845b-6c1a-4a91-b480-22cde6333468
-

ரயில் தண்டவாளத்தில் 500 குடும்பங்கள்

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி ஒன்பது பேரும் நிலச்சரிவுகளில் சிக்கி ஐவரும் என மொத்தம் 14 பேர் கடந்த சில நாள்களுக்குள் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் வீடுகளை இழந்து உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆறுகளில் அபாய அளவையும் தாண்டி தண்ணீர் செல்வதால் 7 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இங்குள்ள ஜமுனாமுக் மாவட்டத்தின் சாங்ஜுரை, பாட்டியா பத்தர் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வெள்ளத்தில் மூழ்காத ஒரே உயரமான ரயில் தண்டவாளத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

புதுச்சேரியில் திரைப்பட நகரம்

புதுச்சேரி: திரைப்படத் துறையினருக்கு மிகவும் பிடித்தமான இடமாக புதுச்சேரி விளங்குகிறது. இங்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய திரைப்பட நகரம் விரைவில் உருவாக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.60 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவியைத் தீயில் தள்ளிய மந்திரவாதி

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், உறவினர்களின் பேச்சைக் கேட்டு ரவி என்ற மந்திரவாதியிடம் ெபற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

"பேய் பிடித்துள்ளது உண்மைதான். பேயை ஓட்ட முதலில் உங்கள் மகளை தீயில் நடக்கவைக்க வேண்டும்," என்று மந்திரவாதி கூறி அதன்படி செய்துள்ளார். கால், உடல் எல்லாம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மகளைப் பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை முயற்சி புகாரை அடுத்து, மந்திரவாதி ரவி சிறையில் அடைக்கப்பட்டார்.

கூடுதல் வேகம் காட்டும்படி வலியுறுத்து

புதுெடல்லி: இந்தியாவில் இதுவரை 191 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில்,

மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், "தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசியைப் போட கூடுதல் வேகத்துடன் செயல்படும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. கிராமங்கள், முதியோர் இல்லங்கள், சிறைச்சாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போடவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.