வெளிநாட்டு மண்ணில் விமர்சனம்: ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவுக்குத் தீங்கு செய்வதாக பாஜக சாடி உள்ளது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவைப் பற்றி அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதற்குச் சமம் என்று பாஜ க செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் இந்திய வெளியுறவு அமைச்சு யார் சொல்வதையும் கேட்பதில்லை என்றும் அந்த அமைச்சில் உள்ளவர்கள் திமிரானவர்கள் என்றும் ராகுல் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "ஆமாம். இந்திய வெளியுறவு சேவை மாறிவிட்டது. அவர்கள் அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களின் வாதங்களுக்குப் பதில் அளிக்கிறார்கள். இது திமிர் அல்ல. இது நாட்டு நலனைப் பாதுகாப்பதாகும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர்
புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகளை இணைக்கும் நடவடிக்கையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரப்படுத்தி உள்ளார். தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். நேற்று முன்தினம் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், அடுத்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவையும் சந்திக்க உள்ளார் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகரின் பெயரை மாற்ற முதல்வர் யோகி திட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகரின் பெயரை மாற்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்காலத்தில் லக்னோ நகரம் லக்ஷ்மண்புரி என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கால ஓட்டத்தில், அந்தப் பெயர் மருவி, லக்கன்பூர் என்று அழைக்கப்பட்டது. அதையடுத்து, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ என்று மாறியது. இந்நிலையில், லக்னோ என்ற பெயரை மாற்றி, மாநிலத் தலைநகருக்கு லக்ஷ்மண்புரி என்று பெயர் வைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என தீர்ப்பு
புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1999 முதல் 2004 வரை முதல்வராகப் பதவி வகித்தபோது, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக 2010ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 26ஆம் தேதி அறிவிக்கப்படும்.

