லக்னோ: திருமணம் நடைபெற இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகன் வழுக்கையாக இருப்பதைக் கண்ட மணமகள் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்தார்.
இதனால் திருமணம் நின்றுபோனது. இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
திருமணப் பேச்சு தொடங்கியது முதல் முந்தைய நாள் மாலை பல்வேறு சடங்குகள் நடந்து முடிந்தவரை மணமகன் தன் வழுக்கையை மறைக்க 'விக்' அணிந்து சமாளித்து வந்துள்ளார்.
அடுத்த நாள் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக திருமண மண்டபத்துக்கு வந்தார் மணமகன்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறிப்போயினர். மேலும், அவர் தலையில் அணிந்திருந்த 'விக்' கழன்று விழுந்தது.
இதைக் கண்ட மணமகள் கடும் அதிர்ச்சி அடைந்தார். தம்மிடம் உண்மையை மறைத்ததால் கோபம் அடைந்த அவர், திருமணத்தை நிறுத்துமாறு கூறினார்.
அவரது பெற்றோரும் குடும்பத்தாரும் வேறு வழியின்றி திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தனர்.
மேலும், திருமண ஏற்பாடுகளுக்காக ரூ. 5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் அதை மணமகன் வீட்டார் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உண்மையை மறைத்ததால் வேறு வழியின்றி மணமகன் வீட்டார் தொகையை தர ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே உண்மையைத் தெரிவித்திருந்தால் மனதளவில் மணமகளை தயார்படுத்தி இருக்க முடியும் என்றும் உண்மையை மறைத்ததால் மணமகன் வீட்டார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் மணமகளின் தாய்மாமன் பின்னர் தெரிவித்தார்.
'பாலா' என்ற இந்தித் திரைப்படம் இதேபோன்ற சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

