செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cd8b0959-ae18-4b80-9fe9-a2a2e5097c79
-

பங்ளாதேஷ் எல்லையில் ரூ.6.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கோல்கத்தா: பங்ளாதேஷில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.15 கோடி மதிப்புள்ள தங்கத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்தது என்றும் அதன் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் சோதனையைத் தீவிரப்படுத்தியதாகவும் அப்படையினர் கூறினர். எல்லைப் பகுதி அருகே சென்றுகொண்டிருந்த ஒரு லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது, ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால், கறுப்பு துணியால் மூடப்பட்டிருந்த பெரிய பொட்டலத்தில் 70 தங்க பிஸ்கெட்டுகளும் மூன்று தங்கக்கட்டிகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் கைதானார். இதேபோல் மற்றொரு சோதனை நடவடிக்கையில், 466.62 கிராம் எடை கொண்ட நான்கு தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக உறவினர் தகவல்

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக அவரது உறவினர் தகவல் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் அவரும் ஒருவர் ஆவார். இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் தாவூத் பதுங்கி உள்ளதாக அவரது சகோதரி ஹசீனாவின் மகன் அலிஷா பார்க்கர் கூறியுள்ளார்.

பெங்களூரு பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து மின்னஞ்சல் வழி மிரட்டல்

பெங்களூரு: கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எனினும், இது வெறும் புரளி எனப் பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூரு காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. அதன் முடிவில், 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் ரஷ்யாவில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. எனினும், அதை அனுப்பியது யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கனமழை, பலத்த காற்றால் டெல்லியில் விமானச்சேவை பாதிப்பு

புதுடெல்லி: பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் டெல்லியில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. சீரற்ற வானிலை காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய பல விமானங்கள் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கனமழையால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தி உள்ளது. மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், விமானங்களை குறித்த நேரத்துக்கு இயக்க முடியவில்லை. பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 44 மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்கள் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் தங்களது விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன. வடகிழக்கு, வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.