சென்னை: 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு, சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளார் சோனியா காந்தி.
அரசியல் விவகாரக் குழுவில் மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தேர்தல் வியூகர் நிபுணர் சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு முடிவெடுக்கும் அமைப்பாக இருக்காது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அந்தக்குழு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல், சிறப்புப் பணிக்குழுவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையேற்பார் என்றும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், பிரியங்கா காந்தி ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என்றும் சோனியா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் குமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசிய யாத்திரை ஒன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் யாத்திரையின்போது அதில் பங்கேற்போர் 12 மாநிலங்களுக்குச் செல்வர் என்றும் 3,500 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் (படம்) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி தனது குரல் சுதந்திரமாக ஒலிக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற வலுவான கூட்டணி தேவை என்றும் எதிர்க்கட்சிகள் இதை மனதிற்கொள்ள வேண்டும் என்றும் கபில் சிபல் கூறினார். இதற்கிடையே, மாநிலங்களவைத் தேர்தலில் அவருக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தரவுள்ளது.