செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1c673059-742d-4e70-834c-c75c46922825
-

திருடிய வீட்டில் 'ஐ லவ் யூ' என்று எழுதி வைத்துச் சென்ற கொள்ளையர்கள்

பானாஜி: கோவாவில் உள்ள ஒரு பங்களாவுக்குள் நுழைந்து கைவரிசை காட்டிய திருடர்கள், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டித் திரையில் 'ஐ லவ் யூ' என்று எழுதி வைத்துள்ளனர். விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த பங்களா உரிமையாளர், மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி, இருட்டிலும் ஒளிரச்செய்யும் எழுத்துகளில் 'ஐ லவ் யூ' என்று கொள்ளையர்கள் எழுதி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். இதையடுத்து, கொள்ளையர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை 73.24% ஆக இருந்தது. அது 2019 முதல் 2021 வரையிலான காலத்தில் 77.95% ஆக அதிகரித்துள்ளது என தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி: யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பிரவீன் சிங், யாசின் மாலிக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ஆம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து, யாசின் மாலிக் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே காஷ்மீரின் சில பகுதிகளில் மோதல் ஏற்பட்டதாகவும் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தாம் ஆயுதங்களைக் கைவிட்ட பின்னர், மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றுவதாக யாசின் மாலிக் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

உயிரோடு கூண்டில் சிக்கிய சிறுத்தையை தீ வைத்துக் கொன்ற கிராம மக்கள்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சப்லோடி கிரா மத்தில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை கிராம மக்கள் உயிரோடு தீ வைத்துக் கொன்றனர். கடந்த வாரம் இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்தனர். நேற்று முன்தினம் இறை தேடி வந்த சிறுத்தை, கூண்டில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கியது. இந்நிலையில், கோபத்தில் இருந்த கிராம மக்கள் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைக்கு தீ வைத்து கொன்றனர். இது தொடர்பாக சிலர் மீது வழக்குப் பதிவாகும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.