காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள், தொலைக்காட்சி நடிகை கொலை
காஷ்மீர்: காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுண்ட் கிராமத்திற்குள் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் நேற்று தெரிவித்தார்.
அதேவேளையில், ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தொலைக்காட்சி நடிகை அம்பிரீன் பட் இருந்தபோது வீட்டின் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், அந்த நடிகையை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் எம்எல்ஏவுக்கு சிறை
திருவனந்தபுரம்: கேரளாவில் பூஞ்சார் தொகுதி முன்னாள் சுயேச்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ், 70, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சைக்கு இடமான முறையில் பேசினார். இதற்காக அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
'இந்தியாவும் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்'
புதுடெல்லி: அமெரிக்காவின் டெக்சஸ் பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கருத்துரைத்த இந்தியாவின் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான பா. சிதம்பரம், துப்பாக்கிகளை வாங்குவது தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள், வெறுப்பை வெளிப்படுத்தும் கொலைகள் அனைத்தையும் எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்தார். துப்பாக்கிகள் தொடர்பான கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இதைச் சாதிக்கும் ஒரு வழியாக இருக்கும் என்றார் அவர்.
துப்பாக்கிகளை வாங்குவது, வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை இந்தியா மறுபரிசீலனை செய்து அவற்றைக் கடுமையாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கருத்துரைத்தார்.
பேருந்து கடத்தல், கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து ஒன்றைப் பட்டப்பகலில் கடத்திச் சென்ற ஆடவர் சாலையோரம் நின்றிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதினார்.
கடைசியில் காளூர் என்ற பகுதியில் பேருந்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள், அந்த ஆடவரைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

