விஜயவாடா: கணவன், மாமியார், நாத்தனார் கொடுமை தாங்காமல் தன் தங்கை பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் அவருக்காக நீதி கேட்டு மாட்டு வண்டியில் தானும் தங்கையும் தங்கள் தாயாரும் உச்ச நீதிமன்றத்தை நாடி புதுடெல்லிக்குப் புறப்பட்டுப் போவதாகவும் ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய சகோதரர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் இரட்டை மாட்டு டயர் வண்டியில் தாயாரான ஜோதி, தங்கை நவ்யதா, 28, இருவரையும் ஏற்றிக்கொண்டு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தான் புறப்பட்டுச் செல்வதாக நாக துர்கா ராவ் என்ற அந்த விவசாயி செய்தியாளர்களிடம் கூறினார்.
"தலைநகர் சென்று உச்ச நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் இரண்டிலும் வழக்குத் தொடுக்கப்போகிறோம். அங்கேயே இருந்து வழக்கை முடித்துக் கொண்டுதான் நாங்கள் ஊர் திரும்புவோம்," என்று ராவ் மேலும் தெரிவித்தார்.
இவரின் சகோதரியான நவ்யதாவுக்கும் நரேந்திர நாத் என்பவருக்கும் 2018ல் திருமணம் நடந்தது. "ரூ.23 லட்சம், 320 கிராம் தங்க நகைகள், வெள்ளியில் ஆன பூசை பொருள்கள், மூன்று ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை வரதட்சணையாக மணமகனுக்குக் கொடுக்கப்பட்டது.
"ஆனால் கணவர் குடிகாரர். மனைவியை நாள்தோறும் அடித்து கொடுமைப்படுத்துவார். அதற்கு மாமியார், நாத்தனார் எல்லாரும் உடந்தை.
"என் தங்கை அடி, உதை, கொடுமை தாங்க முடியாமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார்.
"ஆந்திராவில் காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதால் வழக்கை பதியக்கூட காவல் துறை மறுத்துவிட்டது. ஆகை யால் என் தங்கைக்காக நான் நடக்கிறேன். என் தாயாரும் தங்கையும் உடன் வருகிறார்கள்.
"எங்களுக்காக நீதி கேட்டு வாயில்லா ஜீவன்களான எங்கள் வண்டி மாடுகளும் நடக்கின்றன," என்று தங்கைக்காக நீதி கேட்டு நடக்கும் அந்த அண்ணன் கண்ணீர்மல்க கூறினார்.

