திருமண ஆசை காட்டி கோடிக்கணக்கில் பண மோசடி
புதுடெல்லி: திருமண ஆசை காட்டி முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரிய ஆடவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
38 வயதான கருபா கலும்ஜே என்ற ஆடவர் கடந்த 2019ஆம் ஆண்டு தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பின்னர் தம்மை வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று பலரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, திருமண ஏற்பாடுகளைச் செய்யும் இணையத் தளத்தில் தமது பெயரையும் பதிவு செய்துள்ளார்.
உண்மையான பெயரை மறைத்ததுடன், தமது பெயர் சஞ்சய் சிங் என்றும் கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றும் அந்த இணையத்தளத்தில் பொய்யான விவரங்களை இடம்பெறச் செய்து மோசடி ஆட்டத்தை தொடங்கினார் கருபா.
பல பெண்களிடம் தமக்கு நல்ல மணப்பெண்ணைத் தேடுவதாகக் கூறிய கருபா, பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளார். அவரது பேச்சில் மயங்கிய பலர், நேரில் சந்திக்காமலேயே பணம் கொடுத்துள்ளனர்.
இதுவரை முந்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ள கருபா, இணையத்தளத்திலும்கூட தன் சுயவிவரக் குறிப்புகள் உள்ள பகுதியில் தனக்குப் பதில் வேறொரு இந்திய ஆடவரின் புகைப்படத்தைத்தான் இடம்பெறச் செய்துள்ளார். அவ்வப்போது இந்தப் புகைப்படத்தையும் அவர் மாற்றுவது வழக்கம்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குத்தான் கருபா மீது முதலில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் பலவிதமாகப் பேசி, பிறகு மிரட்டி, 60 லட்சம் ரூபாய் வரை சுருட்டியுள்ளார் கருபா.
அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கருபா குறித்த அதிர்ச்சித் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதையடுத்து அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது ஆறு மாத கால விசாவில் வந்தவர், விசா காலத்தை மீறி இந்தியாவில் தங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு மோசடி ஆவணங்களையும் அவரது கடப்பிதழையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

