அமராவதி: அதிகாலை வேளையில் சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகினர்.
இந்தச் சோகச் சம்பவம் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது.
ஜானி பாய் என்பவர் அக்கிராமத்தில் தனது மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை அவரது வீட்டின் சமையலறையில் இருந்த எரிவாயு உருளை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.
அச்சமயம் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஜானி பாய் உட்பட நான்கு பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது பேரக்குழந்தைக்கு மூன்று வயதுதான் ஆகிறது.
இந்த விபத்தில் அண்டை வீட்டில் இருந்த இருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

