புதுடெல்லி: விசா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக தாம் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்த விசாரணை ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போன்றது. ஐந்து நாள்கள் தொடர்ந்து நடக்கும். இது மூன்றாவது நாள்," என்றார் கார்த்தி சிதம்பரம்.
முன்னதாக மத்திய அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் தன்னையும் தமது குடும்பத்தையும் குறிவைத்து செயல்படுவதாக கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார்.
தனது குடும்பத்தை மவுனமாக்கும் நோக்கத்துடன் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை அமைப்புகளும் மத்திய அரசும் தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது புனையப்பட்டுள்ள இந்த வழக்கானது, நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயலாகக் கருதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தன்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடித் தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார்.

