சண்டிகர்: பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் மாநில அரசைக் கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
27 வயதான சித்து, நேற்று முன்தினம் ஜீப் வாகனத்தில் தனது கிராமம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத சிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று சுட்டுக்கொன்றனர்.
பஞ்சாப் அரசு சித்துவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற இரு தினங்களில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மன்சா தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவிடம் மூஸ்வாலா தோல்வி கண்டார்.
இதற்கிடையே, சித்துவைக் கொன்றவர்கள் உரிய தண்டனை பெறுவதை ஆம் ஆத்மி உறுதி செய்யும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

