புதுடெல்லி: நாடு முழுவதும் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி 131,714 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அந்த ஆண்டில் மட்டும் 366,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும் தமிழகத்தில்தான் ஆக அதிகமாக 45,484 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
தமிழகத்தில் நடந்த விபத்துகளில் 7,039 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு அடுத்தபடியாக, மத்தியப் பிரதேசத்தில் 45,266 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும் 11,141 பேர் மாண்டுவிட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், ஒப்பீட்டு அளவில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 34,243 விபத்துகளில் 19,149 பேர் மாண்டுவிட்டனர். கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி உள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது, அதிக வேகம், மது போதை ஆகியவையே விபத்துகள் நிகழ முக்கிய காரணங்களாக உள்ளன என்று மத்திய போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

