புதுடெல்லி: கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதற்காக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதே மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும் சமூக விரோதிகள் புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்நிலையில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் முன்பைவிட இரு மடங்காக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் 54 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் அந்த வங்கி அறிவித்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, அச்சமயம் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு விளக்கமும் அளித்தது.
ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு வங்கிகளில் கள்ள நோட்டுகளை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 39,453ஆக இருந்தது.
ஆனால், 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அண்மைய கணக்கின்படி, 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 101.9 விழுக்காடாக அதிகரித்து, 70,666ஆக உள்ளது.
இதேபோல் 2,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன. முன்பு 8,798ஆக இருந்த 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, இப்போது 13,604 ஆக அதிகரித்துள்ளது. இது 54% அதிகமாகும்.
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதால், அதே மதிப்புள்ள கள்ள நோட்டுகளின் புழக்கம் 1.6% குறைந்துள்ளது. மறுபக்கம், 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 200, 100, 50, 10 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

