மாநிலங்களவை எம்.பி. பதவி தராத காங்கிரஸ் தலைமைமீது நடிகை கோபம்
புதுடெல்லி: கடந்த 18 ஆண்டுகளாக கட்சிக்காக சேவை ஆற்றிய போதிலும், தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சித் தலைமையைக் குறை கூறியுள்ளார் நடிகை நக்மா. கடந்த 2003ஆம் ஆண்டு கட்சியில் இணைந்த போதே தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக கட்சித் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதி தமக்கு இல்லையா என்றும் நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிரிழந்த கேரள பாடகர்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பல்வேறு இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த பஷீர், எடவா என்ற பகுதியைச் சேர்ந்தவர். கேரள இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பச் சங்கத்தின் தலைவராக பணியாற்றி உள்ளார். நேற்று முன்தினம் ஆலப்புழா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பங்கேற்று பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் பஷீர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை: விஞ்ஞானி தகவல்
புனே: இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பிரக்யா யாதவ் தெரிவித்துள்ளார். எனினும், கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். "குரங்கம்மை பயணத் தொடர்பு மூலம் பரவவில்லை. ஆனால், சமூகத்தொடர்பு மூலம் சில பகுதிகளில் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுவதால், இதன் உடனடி அபாயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்று பிரக்யா யாதவ் கூறியுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்தி
புனே: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் வெடிகுண்டுகளுடன் ஆளில்லா சிறிய வானூர்திகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஒரு வானூர்தியை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

