அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது
மும்பை: உலகளவில் வலிமையான விமானப் படையைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
இம்முறை சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா. இதுகுறித்து விமானப்படை தளபதி விவேக் ராம் சவுதாரி (படம்) பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் வலிமை வாய்ந்த ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று சேவைகளும் அடுத்த தலைமுறைக்காக போரிடும் இயந்திரங்களில் அதிக முதலீடுகளைச் செய்துள்ளன.
"புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதால், அதற்கேற்ப நமது போர் முறைகளில் புதுமையைப் புகுத்த வேண்டும்," என்று தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற பின்னர் தளபதி விவேக் ராம் தெரிவித்தார்.
உலகின் வலிமை வாய்ந்த விமானப்படைகளின் தரவரிசைக் குறியீட்டில், இந்திய விமானப்படை மூன்றாம் நிலைக்கு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது விமானப்படையின் செயல்பாடுகள், மேலாண்மை ஆகியவற்றால் கிடைத்துள்ள உயர்வு என்றார்.
"இந்திய விமானப்படையிடம் ஆறு வெவ்வேறு நாடுகளின் விமானங்கள், நிறைய உள்நாட்டு தயாரிப்புகள் உள்ளன. இதுவே விமானப் படையை மூன்றாவது இடத்துக்கு உயர்த்தி இருக்கக்கூடும்," என்றார் தளபதி விவேக் ராம்.
'வேர்ல்டு டிரெக்டரி ஆஃப் மாடர்ன் மிலிடரி ஏர்கிராஃப்ட்' (டபிள்யூடிஎம்எம்ஏ) என்ற அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா முதல் இடத்திலும் ரஷ்யா அடுத்த இடத்திலும் உள்ளன. சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப் படைகளை பின்னுக்குத் தள்ளி உள்ளது இந்தியா.
98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள், 47,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மேற்குறிப்பிட்ட பட்டியல் தயாராகி உள்ளது.
நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணியிலும் ஈடுபடும் விமானப் படையில் 1,645 போர் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. 170,576 பேர் பணிபுரிகின்றனர்.

