புதுடெல்லி: சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மத்திய அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தார் சத்யேந்தர் ஜெயின். அப்போது தனக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் போலி நிறுவனங்கள் சிலவற்றுக்கு அவர் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, 4.81 கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சத்யேந்தர் ஜெயின் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தார் மீதும் வழக்கு பாய்ந்தது.
மேலும், சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிறுவனங்களும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டன. கடந்த 2017ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
சத்யேந்தர் ஜெயினுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஹவாலா மூலம் பணப்பட்டுவாடா நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோல்கத்தாவில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த தொகை நிலங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அச்சமயம் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மிக விரைவில் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தோல்வி பயம் காரணமாக, பாஜக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக டெல்லி துணை முதல்வர் சிசோடியா சாடியுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் பதிவான போலி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்பாளராக சத்யேந்தர் ஜெயின் நியமிக்கப்பட்டிருப்பதே கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்றார். ஆம் ஆத்மி தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.

