புதுடெல்லி: கனமழை காரணமாக டெல்லியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததை அடுத்து, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிலைகுத்தியது.
மழைக்கு இருவர் பலியாகிவிட்டதாகவும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய சில தினங்களாக வடமாநிலங்களில் வெயில் உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது எதிர்பாராத வகையில் புயல் காற்றும் வீசியது.
மேக வெடிப்பு போல் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவானது. பலமாக வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் இதுபோன்று புயல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே,மோசமான வானிலையால் டெல்லி வந்த எட்டு விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. 70க்கும் மேற்பட்ட விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்பதாகவும் டெல்லி மாநகரம் தண்ணீரில் மிதக்கும் நகரம்போல் மாறிவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கோடை காலத்தில் பெய்த இந்தக் கனமழை இதமாக இருந்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

