அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதியமைச்சு தகவல்
புதுடெல்லி: மூன்று கொரோனா அலைகளைச் சந்தித்தபோதும் இந்திய பொருளியல் வலுவாக மீண்டு வருகிறது என அமெரிக்க நிதிஅமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் பாதிப்பானது இந்திய பொருளியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அதிக மானோர் உயிரிழக்கவில்லை என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் அந்நாட்டின் பொருளியல் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிற நாடுகளின் பொருளியல் நிலைமை குறித்தும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய பொருளியல் வளர்ச்சியானது ஏழு விழுக்காடாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளியல் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கிச் சென்றது என்று அமெரிக்க நிதியமைச்சு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளியல் எட்டு விழுக்காடாக உயர்ந்தது என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
"2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 விழுக்காட்டினருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்றும் இந்நடவடிக்கையானது பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளியலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியது என்றும் அமெரிக்க நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 8,329 பேருக்கு கிருமி தொற்றியது.
இது கடந்த 103 நாள்களுக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும். நேற்று முன்தினம் மேலும் பத்து பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 40,370 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 1,508,406 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

