திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஒலிப்பதிவு ஒன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கக் கடத்தலில் கேரள முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்வப்னா.
இந்நிலையில், முதல்வருக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னுடன் பேசியது தொடர்பில் அந்த ஒலிப்பதிவை அவர் வெளியிட்டார்.
கடத்தல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தாம் இவ்வாறு செய்யவில்லை என்றும் தம்மை நிரூபிக்கவே இந்நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் ஸ்வப்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தம்மை வழக்கில் இருந்து காப்பாற்ற வெளிநாட்டுக்குச் செல்ல உதவுவதாக ஷாஜ் கிரண் கூறியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேரள முதல்வருக்கும் அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கும் சொந்தமான பணம் அமெரிக்காவுக்கு ஒரு தேவாலயம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஸ்வப்னா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஸ்வப்னாவின் முன்பிணை கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

