புதுடெல்லி: ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை முன்னிட்டு திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்
வருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்.
அதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் "குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர்களும் கூடி, நம் நாட்டு அரசியலின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கு குடியரசுத் தலைவர் தேர்தல் சரியான ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
"ஏனெனில், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொன்னான வாய்ப்பை எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு இந்த தேர்தல் வழங்குகிறது.
"நமது ஜனநாயகத்துக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக எதிர்க்
கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
"எனவே, வரும் 15ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
"இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன்," என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 10.86 லட்சம் ஆகும்.
இதில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வாக்கு மதிப்பு 48 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிகளும் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போதைய துணை அதிபர் வெங்கையா
நாயுடுவை, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக களமிறக்கினால், திமுக ஆதரிக்கும் வாய்ப்பு
அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் - புதுடெல்லியில் ஆலோசனை கூட்டம்
அதிபர் தேர்தலை அறிவித்த தேர்தல் அதிகாரிகள்.
படம்: இந்திய ஊடகம்

