'அமைதியைப் பேணுவதும் முக்கியம்; இஸ்லாத்தை அவமதித்தால் ஒன்றாக நிற்போம்'
புதுடெல்லி: நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்களைக் கைவிடுமாறு இஸ்லாமியர்களுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் பள்ளிவாசல்களின் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இரண்டு பதின்ம வயது இஸ்லாமியர்கள் இறந்தனர். காவல்துறையினர் உட்பட முப்பது பேர் காயமடைந்தனர்.
இத்தகைய சூழலில் மேற்குறிப்பிட்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்காக பெரிய அளவில் ஒன்றுகூட வேண்டாம் என இஸ்லாமிய குழுக்கள் அறிவுறுத்தி உள்ளன.
"யாரேனும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்பது நமது கடமையாகும். அதேசமயம் அமைதியைப் பேணுவதும் முக்கியம்," என்று ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மூத்த உறுப்பினரான திரு.மாலிக் அஸ்லம் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தபோதும் அவர் மௌனம் காக்கிறார்.
இந்நிலையில், இழிவுபடுத்தும் கருத்துகளை தெரிவித்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுவரை பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 400 பேர் கைதாகி உள்ளனர். சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டன. இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இஸ்லாமிய ஆடவரின் வீடு இடித்துத் தள்ளப்பட்டது. இது சமூகஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொது இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஒரு வீடுதான் இடிக்கப்பட்டுள்ளது என்றும் போராட்டங்களில் ஈடுபடும் உரிமை உண்டு என்றும் மாநில அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் வீதியில் இறங்கியும் போராடலாம் என்கிறார்கள் அம்மாநில அதிகாரிகள். இந்நிலையில், போராட்டங்களில் பங்கேற்றதற்காக அரசு அளித்துள்ள தண்டனை இந்த வீடு இடிப்பு நடவடிக்கை என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

