ஸ்ரீநகர்: நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் இந்த ஆண்டு முப்பது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் உள்ள இந்துக்களும் பண்டிட் இன மக்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதுடன் காரணமின்றி கொல்லப்படும் கொடூரமும் நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் புல்வாமா பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். சுமார் பத்து மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டின் முடிவில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையின் காஷ்மீர் மண்டலப் பிரிவு தெரிவித்தது. அவர்களில் முப்பது பேர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள் ஆவர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த மேலும் 158 பயங்கரவாதிகள் நடமாடி வருவதாக ராணுவத்தரப்பு தெரிவித்தது. அவர்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் 83 பேரும் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 30 பேரும் அடங்குவர். மேலும் ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 38 பேரும் உள்ளனர் என்று ராணுவத் தரப்பு மேலும் கூறியுள்ளது.

