செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
592a54a7-5433-45a5-9c1f-de290d1b7a22
-

இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. வர்த்தகச் சந்தையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரூபாய் மதிப்பை மீண்டும் உயர்த்தவும் நிலைநிறுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா: மும்பையில் ஒரே நாளில் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. அண்மையில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்து பதிவானது. இந்நிலையில், மும்பையில் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் நூறு பேர் தொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 வயதுக்கும் கீழுள்ள இருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் புதிதாக 8,084 பேருக்கு கிருமி தொற்றியது. மேலும் பத்து பேர் பலியாகிவிட்டனர்.

மோடி: ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாக்கப்பட வேண்டும்

புதுடெல்லி: தண்ணீர், மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய மிகப்பெரிய கொடை என்றும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக கிராமங்களில் கூட்டு முயற்சிகளை கிராமத் தலைவர்கள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பெண்கள் இருக்கையில் அமர்ந்து பயணித்த ஆண்களுக்கு அபராதம்

பெங்களூரு: கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக் கான இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த ஆண்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெங்களூருவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேருந்துகளில் அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது 170 ஆண்கள் பெண்களுக்கான இருக்கையை ஆக்கிரமித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 17 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

பேருந்து விபத்தில் ஐவர் பலி

அமராவதி: தூக்கக் கலக்கத்தில் பேருந்து ஓட்டிய ஓட்டுநரால் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம், அல்லூர் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது.