புதுடெல்லி: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 1.25 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் ஆள்சேர்க்கை இடம்பெறாதது இதற்குக் காரணம்.
இந்நிலையில் 'அக்னிபாத்' எனும் புதிய ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தை மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகப்படுத்தினார். "இந்த திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
ராணுவச் செலவுகளைக் குறைக்கும் வகையில் முப்படைகளிலும் இத்தகைய வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
'அக்னிபாத்' திட்டம் உடனடியாக நடப்புக்கு வருவதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்றார்்.
ஆண்டுக்கு 40,000 முதல் 50,000 வரையிலான வீரர்கள் ராணுவப் பணிகளில் நியமிக்கப்படுவர்.
இவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே தகுதி அடிப்படையில் மேலும் 15 ஆண்டுகளுக்குப் பணியில் நீடிக்க அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் நான்காம் ஆண்டின் இறுதியில் ராணுவச் சேவையை விட்டு வெளியேறுவர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொள்கை மாற்றத்தால் தற்காப்புத் துறை ஊழியர்களின் ஓய்வு ஊதியம் தொடர்பில் அரசாங்கத்திற்குப் பெருந்தொகை மிச்சமாகும். இருப்பினும் குறுகிய காலத்திற்கு மட்டுமே சேவையில் ஈடுபடுவோரிடம் தங்கள் படைப்பிரிவு மீதான கடப்பாடு, விசுவாசம் போன்றவற்றை எதிர்பார்க்க இயலாது என்றும் இது ராணுவத்தின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும் என்றும் மூத்த நிபுணர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
முப்படைகளில் எப்போதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்க இது வழிவகுக்கும் என்று கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களைக் கற்பிப்பது எளிது என்றார். பணி ஓய்வுக்குப் பிறகும் இந்தத் திறன்கள் இளையருக்கு உதவும் என்றாரவர்.

