புதுடெல்லி: காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள் வரை குறையக்கூடும் என அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரை குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அப்பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. அப்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளைவிட, டெல்லியில் காற்று மாசு 21 மடங்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது என்றும், இந்தியாவில் தனி மனித உடல்நலனுக்கு காற்று மாசு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில், இந்திய குடிமக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் ஐந்து ஆண்டுகளை இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.
அதிக துகள் மாசு செறிவு, அதிக மக்கள்தொகை காரணமாக இந்தியா காற்று மாசு தொடர்பான ஆக அதிகமான சுகாதாரச் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் கடந்த 2013 முதல் உலக அளவிலான மாசு அதிகரிப்பில் சுமார் 44 விழுக்காடு இந்தியாவின் பங்காக உள்ளது என்றும் ஆய்வு மேற்கொண்ட நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
துகள் மாசு அளவானது இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைவிட சுமார் 11 மடங்கு அதிகம். கடந்த 1998ஆம் ஆண்டில் இருந்து இதுநாள் வரை துகள் மாசு என்பது 61.4% அதிகரித்துள்ளது. இந்திய குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் 2.1 ஆண்டுகள் குறைவதற்கு இந்த பாதிப்பு முக்கிய காரணியாக உள்ளது.
தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் காற்று மாசு அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

