செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8b5b7ddb-7809-4643-92f7-7e7e4e1728e2
-

2023 மார்ச் இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை: அமைச்சர் தகவல்

புதுடெல்லி: எதிர்வரும் மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அந்த ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். 2023 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் முழு அளவிலான 5ஜி சேவைகளைப் பெற முடியும் என்றார் அமைச்சர்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் முன்னிலையாகாத சிவசேனா அமைச்சர்

மும்பை: பண மோசடி வழக்கு விசாரணைக்காக நேரில் முன்னிலையாகுமாறு அமலாக்கத்துறை அழைப்பாணையை மகாராஷ்டிர மாநில அமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான அனில் பரப் புறக்கணித்தார். நேரில் செல்வதற்குப் பதில் கடந்த செவ்வாய்க்கிழமையே அமலாக்கத்துறையின் அழைப்பாணைக்கு அவர் பதில் அனுப்பிவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். ரத்னகிரி மாவட்ட கடலோரப் பகுதியில் அனில் பரப் சொகுசு தங்குவிடுதி கட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பண மோசடியில் ஈடுபட்டார் என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு ஆகும்.

கர்நாடக மேலவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா ஓரிடத்தில் வெற்றி

பெங்களூரு: கர்நாடக மேலவைத் தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் தலா ஓரிடத்தில் வெற்றிபெற்றன. 75 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் காலியாகும் நான்கு தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் பாஜகவின் பசவராஜ் ஹொரட்டி தொடர்ந்து எட்டாவது முறையாக மேலவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். மீதமுள்ள இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்ட போதிலும் முடிவு விவரம் தெரியவில்லை. எனினும் பாஜகவும் காங்கிரசும் தலா ஓரிடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.