10,000 பேர் மீட்பு, நிலச்சரிவில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு
கௌஹாத்தி: அசாம் மாநிலம் மீண்டும் கனமழையால் புரட்டிப்போடப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பல முக்கிய சாலைகளும் பாலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
எட்டு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை நிலைகுத்தியுள்ளதாகவும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் அசாம் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. அந்தப் பாதிப்பில் இருந்து அசாம் மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் மீண்டும் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களையும் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
தலைநகர் கௌஹாத்தியின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் இரண்டடி உயரத்துக்கு தேங்கி உள்ளது. இடைவிடாத மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர். கடந்த 13ஆம் தேதி முதல் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை படை தெரிவித்தது.
நிலச்சரிவுகளால் கீதாநகர், சோனாபூர், கலாபஹார், நிஜரபார் பகுதிகளில் உள்ள முக்கிய இணைப்புப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
தற்போது எட்டு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மாநில அரசின் மீட்புக்குழுக்களுடன், தேசியப் பேரிடர் மீட்புப் பணியாளர்களும் இணைந்துள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள் முடங்கி இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

