லக்னோ: இந்திய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.
இந்நிலையில், அவரது ஏற்பாட்டில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் உட்பட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரிடம் இருமுறை கோரிக்கை வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதை ஏற்க சரத்பவார் மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
எனவே பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் விரைவில் அதுகுறித்து முடிவாகும் என்றும் முதல்வர் மம்தா கூறினார்.
பல மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒரு நல்ல தொடக்கம் என வர்ணித்தார்.
இதேபோன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை மீண்டும் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார் மம்தா.
இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 11 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
பாஜக கூட்டணி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பது விரைவில் தெரியவரும்.

