புதுடெல்லி: ரஷ்யா - உக்ரேன் இடையிலான பிரச்சினை காரணமாக உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வழக்கத்தைவிட, கூடுதலாக தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன.
இது பல நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தியாவைத் தடை செய்யக் கூறி நிர்பந்திக்க முடியவில்லை.
இதற்கிடையில் இந்தியா முழுவதும் கடுமையான நிலக்கரி
தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன் காரணமாக மின்உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில்தான் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 30 விழுக்காடு தள்ளுபடியில் கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து, நிலக்
கரியையும் 30 விழுக்காடு தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்து வருவதாகக் கூறப்படுகின்றது.
கடந்த மே 27ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிலக்கரியை
இந்தியா 6 மடங்கு அதிகமாக வாங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன.
"இதுபோன்று இறக்குமதியைஇந்தியா இதுவரை செய்த தில்லை," என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை வாங்கினால் போக்குவரத்துச் செலவு அதிகம் என்பதால் இந்தியா மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது.
தற்பொழுது ரஷ்யா அதிக தள்ளுபடியில் நிலக்கரியைக் கொடுப்பதால் செலவினங்கள் போக லாபம் கிடைக்கிறது. அதனால் இந்தியா தற்பொழுது ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை அதிகம் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த வர்த்தகத்திற்கு கட்டணமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் நாணய மாக ரஷ்ய நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாள்களில் 2,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. இதே காலகட்டத்தில் எண்ணெய் வர்த்தகமும் 31 மடங்கு அதிகரித்து, 16,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிலக்கரியை 30 விழுக்காடு தள்ளுபடியில் இறக்குமதி செய்கிறது இந்தியா. படம்: ஊடகம்

