ஸ்வப்னாவிற்கு அமலாக்கத்துறை அழைப்பாணை
கொச்சி: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நாளை மறுநாள் ஸ்வப்னா சுரேஷ் முன்னிலையாக வேண்டும் என அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தி: பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நேற்று 52வது பிறந்த நாள். அதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி, "இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் நாம் கைகோர்த்து நிற்கவேண்டும். அதனால் எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என நாடு முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.
அசாம் வெள்ளத்தில் 63 பேர் பலி
அசாம்: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்கிய பரூக் அப்துல்லா
புதுடெல்லி: அதிபர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடந்தது. அப்போது, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் பரூக் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பரிசீலனை செய்யப்படுவதில் இருந்து எனது பெயரை விலக்கிக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வருகிறது என நம்புகிறேன். இந்த நிச்சயமற்ற நேரத்தில் எனது முயற்சி உதவியாக இருக்கக்கூடும். நான் இன்னும் தீவிரமான அரசியலை இறங்க உள்ளேன். காஷ்மீர் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமாக உள்ளேன். எனது பெயரை முன்மொழித்த மம்தாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,899 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42,699,363 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 524,855 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 72,474 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

