இந்தியாவில் உள்ள சீன போலி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ய உதவி
புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ய, இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் 400 பேர் உதவியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
நாட்டின் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னரும், எல்லையில் அவ்வப்போது சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகள் நடப்பதும் இந்திய ராணும் அதற்குப் பதிலடி கொடுப்பதும் நடந்து வருகிறது.
சீனாவுடனான வர்த்தக உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் சீன நாட்டு நிறுவனங்களின் மீதான கண்காணிப்பு தீவிரமாகி உள்ளது.
சந்தேக வலையில் உள்ள சீன நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் மத்திய விசாரணை முகமைகள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்நிலையில், சீன நிறுவனங்கள் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இதற்காகப் பல்வேறு பகுதிகளில் போலி நிறுவனங்களை நிறுவி, தங்களது கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்புக்கு நானூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இவர்கள் வரி ஏய்ப்புக்கான வழிமுறைகளை சீன நிறுவனங்களுக்குக் கூறி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு குறித்து மத்திய நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சுக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து விசாரணை தொடங்கியது. அதில், பெரு நகரங்களில் போலியான சீன நிறுவனங்களை நிறுவ கணக்குத் தணிக்கையாளர்கள் உதவி இருப்பது தெரியவந்தது.
மொத்தம் 400 கணக்குத் தணிக்கையாளர்களும் நிறுவனச் செயலர்களும் இந்த மோசடிக்குத் துணைபோயுள்ளனர்.
எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்திய நிறுவன விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நீடித்து வருகிறது.

