அதிபர் தேர்தலில் போட்டியிட காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு
புதுடெல்லி: அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். தம்மைவிட சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒருவரை பரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண் டுள்ளார். "மிக உயர்ந்த பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப் பட்டதற்கு நன்றி. எனினும், அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வேட்பாளர் ஒருவரை எதிர்க் கட்சிகள் நிறுத்த வேண்டும்," என கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அதிபர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஏற்கெனவே காஷ்மீர் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லாவும் எதிர்க்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டி யிட மறுத்துவிட்டார். இதற்கிடையே. பாஜக சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மிக விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகனுடன் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய தந்தை தேர்ச்சி; மகன் தேர்வில் தோல்வி
மும்பை: புனேவைச் சேர்ந்த 43 வயதான பாஸ்கர் வாக்மரே குடும்பச் சூழல் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். இந்நிலையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற விரும்பிய அவர், அதே வகுப்பில் படித்து வந்த தனது மகனுடன் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தினமும் வேலை முடிந்து திரும்பிய பிறகு ஆர்வத்துடன் பாடங்களைப் படித்த பாஸ்கர், அண்மையில் தனது மகனுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். வெள்ளிக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மகன் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில், பாஸ்கர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து தன் மகனுக்கு படிப்பில் உதவப்போவதாக அவர் கூறியுள்ளார்.
பறவைகள் மோதியதால் ஒரே நாளில் மூன்று விமானச் சேவைகள் பாதிப்பு
கவுகாத்தி: விமானம் மீது பறவை மோதியதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி-ஜபல்பூர், பாட்னா-டெல்லி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் மீது பறவைகள் மோதியதை அடுத்து அவை உடனடியாக தரையிறக்கப்பட்டன. அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் இருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லிக்குப் புறப்பட்டது. ஆனால் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அதன் இன்ஜின் மீது பறவை ஒன்று மோதியது. இதில் இன்ஜின் பகுதி சேதமடைந்ததை அடுத்து விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார். ஒரே நாளில் மூன்று விமானச் சேவைகள் பறவைகள் விமானத்தின் மீது மோதியதால் பாதிக்கப்பட்டன.

