திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில் நேர்மையான, நியாயமான விசாரணைக்கு அம்மாநில அரசே தடையாக இருந்ததாக மத்திய வெளியுறவு இணைய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசின் அரசியல் தலையீடு காரணமாக கேரள காவல்துறையினரால் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றார்.
தங்கக் கடத்தல் விவகாரத்தால் கேரள அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வரின் குடும்பத்தாருக்கும் கடத்தலில் தொடர்புண்டு என்று ஸ்வப்னா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதால் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தினமும் ஏதாவது போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற வலுவான சந்தேகமும் கவலையும் பாஜகவுக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார்.
"முதல்வரின்கீழ் உள்ள பொது நிர்வாகத்துறை செயல்பாடு, ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரக ஊழியர்களுடனான தொடர்பு போன்றவை மற்ற மாநிலங்களில் கேள்விப்படாத ஒன்றாகும்.
"மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு நடந்து கொண்டது, மத்திய விசாரணை அமைப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு காரணமாக அமைந்துள்ளன," என்றார் அமைச்சர் முரளீதரன்.
கேரள காவல்துறையினர் திறமையற்றவர்கள் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஸ்வப்னா சுரேஷ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கேரள முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

