இந்தியாவில் ஆசிரியர் தேர்வு எழுதி 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
57 வயதான கேதரீஸ்வரா ராவ் 1998ல் ஆசிரியர் தேர்வுக்கு அமர்ந்தார். தேர்வில் சிறப்பாக செய்திருந்தாலும், அவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. சில சட்டச் சிக்கல்களால் அவருக்கு வேலை அளிக்கப்படவில்லை என்றார் திரு ராவ்.
வேறு சரியான வேலையும் அமையவில்லை. தனக்கென இருந்த ஒரே உறவான தம்முடைய தாயார் மாண்ட பிறகு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். கடந்த 24 ஆண்டுகளாக பிச்சை எடுத்து பிழைத்துவந்தார் திரு ராவ். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், அவர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அவருக்கு கிடைத்தது.
"நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கல்வித் துறையில் 1992ல் பட்டம் பெற்றேன். நான் ஆசிரியர் தேர்வில் சிறப்பாக செய்திருந்தாலும் அதற்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது வேலை கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி," என்றார் திரு ராவ்.

