கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மேலும் மோசமடைந்து வரும் நிலையில், அங்கு பலி எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் ஓடும் ஐந்து முக்கிய நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்ரா, கோபிலி, பெக்கி உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைக் கடந்துள்ளது.
எனவே, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் பருவ மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் நிலச்சரிவால் உயிரிழந்துவிட்டனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 4.7 மில்லியன் பேர் மழை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சிறார்கள் என்றும் அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 34 மாவட்டங்களில் தற்போது 32 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான கிராமங்களும் பல்வேறு நகரங்களும் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிஉள்ளன.
மாநிலம் முழுவதும் 810 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 615 நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கும் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2,31,819 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள நிலையில், 113,485 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையே, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மிடம் தெரிவித்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

