செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f874da71-b3b2-49c9-8af3-b0c6f914da62
-

பாடகர் சித்து மூசேவாலாவைச் சுட்டுக் கொன்ற இருவர் உட்பட மூவர் கைது

சண்டிகர்: பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் கைதாகி உள்ளனர். சித்து கொலை வழக்கில் ஏற்கெனவே குண்டர் கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னோ கைதாகி உள்ளார். இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்பதாக கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த மே 29ஆம் தேதி சித்துவை சுட்டுக்கொன்றதாக ஹரியானாவைச் சேர்ந்த பிரியாவ்ராத் (26 வயது), காசிஷ் ஆகிய இருவரும் கைதாகினர். மேலும் பஞ்சாப்பைச் சேர்ந்த 29 வயதான கேசவ் குமாரும் கொலைக்கு உதவியதாக கைதானார்.

வாரணாசி விமான நிலையத்தில் சமசுகிருதத்தில் கொரோனா அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளுக்கான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சமசுகிருதத்திலும் அறிவிக்கிறார்கள். வாரணாசி, பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியாகும். இதற்கு சமூக ஊடகங்களில் ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வாரணாசி ரயில் நிலையத்திலும் சமசுகிருதத்தில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

கடையைப் பூட்டாமல் இருந்திருக்கலாம்: திருடன் எழுதி வைத்த கடிதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள துணிக்கடையில் திருட முயற்சி செய்த ஒரு திருடனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தக் கடையில் ரொக்கப் பணம், விலை உயர்ந்த பொருள்கள் என எதுவும் சிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு சிறு கடிதம் எழுதி வைத்துள்ளான். அதில், "எதுவும் இல்லாத கடையை எதற்காக மூட வேண்டும். கடைக்குப் பூட்டுப் போடாமல் இருந்திருந்தால் கடையின் கண்ணாடிக் கதவேனும் தப்பியிருக்கும். இப்படிக்குத் திருடன்," என்று குறிப்பிட்டிருந் தான். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கடையில் திருட முயன்றது வயநாடு பகுதியைச் சேர்ந்த விஸ்வராஜ் என்பது தெரியவந்தது. இவர் மீது அறுபதுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சோனியா வீடு திரும்பினார்

புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் வீடு திரும்பினார். ஜூன் 2ஆம் தேதி அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டுத் தனிமையில் இருந்தபோது, மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே இந்தியாவில் நேற்று முன்தினம் புதிதாக 9,923 பேருக்கு கிருமி தொற்றியது. மேலும் 17 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

காதலித்த இரு பெண்களையும் திருமணம் செய்த இளையர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் ஓரான் என்ற இளையர் ஒரே சமயத்தில் தாம் காதலித்த இரு பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரே சமயத்தில் இரு பெண்களைக் காதலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் தாம் காதலித்த குஷன் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநிலத்தில் செங்கல் சூளை வேலைக்குச் சென்றபோது அங்கு சுவாதி என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். பின்னர் அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு சுவாதியுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து விவரம் அறிந்த கிராம மக்கள் சந்தீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பஞ்சாயத்து இந்த விவகாரம் குறித்து விசாரித்தது. அப்போது சந்தீப்பை காதலிப்பதாக இரு பெண்களும் கூறினர். சந்தீப்பும் தாம் இருவரையும் விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து இரு பெண்களையும் திருமணம் செய்துகொள்ள கிராமப் பஞ்சாயத்து அனுமதி அளித்தது.