பாட்னா: அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை அடக்காமல் பீகார் மாநில அரசு கண்களை மூடிக்கொண்டுவிட்டதாக அம்மாநில பாஜக தலைவரான சஞ்சய் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டி உள்ளார்.
போராட்டங்கள் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதுவரை எந்த கருத்தும் கூறாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"முதல்வர் தனது அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடவில்லை. போராட்டக்காரர் களிடம் அமைதியாகப் போராடுங்கள் என்று கூறவும்கூட முன்வர வில்லை," என்று சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மதேபுரா பகுதியில் உள்ள பாஜகவின் அலுவலகம் போராட்டக்காரர்களால் சூறையாடப்படும் காணொளிப்பதிவை அவர் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் போராட்டக்காரர்களைத் தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது பதிவாகி உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் புத்தி பேதலித்தது போல் பொறுப்பில்லாமல் பேசியுள்ளதாக பீகார் முதல்வருக்கு நெருக்கமான ஆளுங்கட்சிப் பிரமுகர் ராஜீவ் ரஞ்சன் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பீகாரில் மட்டுமன்றி இதர மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அக்னிபாதை திட்டத்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் போராடுபவர்களின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"வன்முறையை எந்த அரசும் ஆதரிக்கவில்லை. இளைஞர்களின் அச்சத்தைப் போக்க முயற்சிக்காமல் எங்கள் அரசு மீது புகார் கூறுகிறார்கள்.
"இவர்களால் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நிகழும் வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை," எனக் ராஜீவ் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக பீகாரில்தான் பெரிய அளவிலான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அங்கு ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பாஜக ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில் அக்னிபாதை போராட்டங்களின்போது ஆறு இடங்களில் பாஜக அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன.

