அதிபர் தேர்தல் வேட்பாளர்களான திரௌபதி முர்முவுக்கும் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையே பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் உள்ளன. பீகாரில் பிறந்தவரான யஷ்வந்த் சின்ஹா 84 வயதானவர். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர் இவர். 64 வயதாகும் திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தின் பழங்
குடியினப் பெண். இதன் காரணமாக பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது பாஜகவின் திட்டம்.
இருவருமே ஆசிரியர்களாகவும் அரசுப் பணியாளர்களாகவும் இருந்த வர்கள். பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசுப் பதவிகளில் அங்கம் வகித்தவர்.
திரௌபதி முர்மு பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராகப் பணியாற்றியவர். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சாரத் துறைகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். அதேபோல் இருவருமே அரசுப் பணியிலிருந்து விலகி அரசியலுக்கு வந்தவர்கள்.
யஷ்வந்த் சின்ஹா பாஜக பொதுச் செயலாளராகவும் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தவர். பாஜகவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, 2000ஆம் ஆண்டு ஒடிசாவில் பாஜக-பிஜு ஜனதா தளக் கூட்டணி ஆட்சியின் போது வர்த்தகம், போக்குவரத்து, மீன்வளம் மற்றும் விலங்குநல மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார்.

