10 ஆண்டு சிறை: லாலு கட்சி எம்எல்ஏ பதவி பறிபோகிறது
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) அனந்த் சிங்கிற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஏகே 47 ரக துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமது எம்எல்ஏ பதவியை இழக்கும் அபாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதியாக வலம் வரும் அனந்த் சிங், ஐந்தாவது முறையாக மொகாமா தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்ததெடுக்கப்பட்டார்.
பிச்சைக்காரருக்கு வாத்தியார் வேலை
ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கேதாரேஸ்வர் ராவ், 55, 1998ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். ஆனால், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு பல்லாண்டு களாக இழுபறியில் இருந்தது. அதனால், பிழைப்புக்கு வழியின்றி ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட இவர், பழைய செய்தித்தாள், பிளாஸ்டிக் பொருள்களை விற்று காலத்தைத் தள்ளினார். சில நாள்கள் பிச்சை எடுத்ததாகவும் அவர் கூறினார். தற்போது, 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேறியோருக்கு வேலை வழங்க நீதிமன்றம் உத்தர விட்டது. வேலை நியமன ஆணை கையில் கிடைத்ததும் கேதாரேஸ்வர் ராவ் (படம்) ஆனந்தக்கண்ணீரில் நனைந்தார்.
மழை, வெள்ள மரணம் 89
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநிலத்தில் சுமார் 32 மாவட்டங் கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப் பட்ட மக்கள் 1,500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் வேண்டும்: சோனியா
புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட 'யங் இந்தியன்' நிறுவனத்துக்கு நேஷனல் ஹெ ரால்ட் பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மாற்றப்பட்டன. இதில் நடைபெற்ற தாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ராகுல் காந்தியிடம் இம்மாதம் 13, 14, 15, 20, 21 தேதிகளில் 60 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அடுத்து, சோனியா காந்தி இன்று (ஜூன் 23) விசாரணைக்கு முன்னி லையாக அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் வீட்டில் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் விசார ணையை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டு அமலாக்கத்துறைக்கு சோனியா நேற்று கடிதம் அனுப்பினார்.

